×

Food spot

அவல் மில்க்

அவல் என்றாலும், மில்க் என்றாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், இதை இரண்டையும் சேர்த்து ஒரு டிஷ் தயாரிக்கலாம் என்பது பலருக்கு தெரியாதுதான். ஆமாம், கேரளாவில் புட்டு, கடலைக்கறி எவ்வளவு ஃபேமசோ, அதே அளவுக்கு ஃபேமசானது அவல்மில்க். மில்க்கில் வறுத்த அவலையும், மேலும் சில கடலைகளையும் சேர்த்து தருவார்கள். அவல் மில்க் தயாரிப்பதற்கு தோதான பதம் கேரள மக்களுக்குதான் சரியாக தெரியும். இந்த அவல் மில்க்கை ஒருவேளை உணவாக சாப்பிடக்கூடிய ஆட்கள் கேரளாவில் பலபேர் இருக்கிறார்கள். அந்தளவு சுவையும், பாரம்பரியமும் கொண்ட அவல் மில்க்கை சென்னையில் சாப்பிட வேண்டுமென்றால் நுங்கம்பாக்கத்தில் இருக்கிற க்ரசன்ட் ரெஸ்டாரென்ட் நல்ல சாய்ஸ்.

சிக்கன் பாயா

பெரும்பாலான உணவகங்களில் இடியாப்பமும், மட்டன் பாயாவும் காலை வேளை உணவாக இருக்கும். இதனால் மட்டன் பாயாவை அனைவரும் சாப்பிட்டு பார்த்திருப்பார்கள். ஆனால், சிக்கனில் பாயா இருக்கிறதா? எனக் கேட்டால் யாருக்குமே பதில் சொல்ல தெரியாது. ராயப்பேட்டையில் இருக்கிற கோழி இட்லி என்ற உணவகத்தில் இட்லி, இடியாப்பம், தோசைக்கு சிக்கன் பாயா தருகிறார்கள். இது மட்டனை விட கூடுதல் சுவையுடன் இருப்பதோடு, புது விதமான சுவையாகவும் இருக்கிறது. சென்னையில் முதன்முதலாக சிக்கன் பாயாவை கொண்டுவந்த இந்த கடைக்கு, அதை சாப்பிட்டுப் பார்க்கவே பிரபலங்கள் அடிக்கடி விசிட் அடிக்கிறார்கள்.

புத்தரேகுளு

புத்தரேகுளு என்பது ஆந்திராவில் கிடைக்கக்கூடிய ஒருவகை இனிப்பு. இந்த வகை இனிப்பினை ஆந்திராவில் குடிசைத்தொழிலாக பலர் செய்து வருகிறார்கள். நம்ம ஊரின் கடலை மிட்டாய் போல ஆந்திராவில் புத்தரேகுளு மிக பிரபலம். ஆந்திராவின் அட்ரெயபுரம் என்கிற கிராமத்தில் கண்டுபிடுக்கப்பட்ட இந்த இனிப்பு அந்த மாநிலத்தின் புவிசார் குறியீடு பெறுவதற்கான பட்டியலிலும் இருக்கிறது. அரிசி மாவில் தயாரிக்கப்படுகிற ஒருவகை மாவில் இந்த புத்தரேகுளு தயாரிக்கப்பட்டு அதன்மேல் சர்க்கரையும், நெய்யும் தடவிக்கொடுப்பார்கள். இதை அப்படியேவும் சாப்பிடலாம். சிலர் அதனுள் கூடுதலாக சில நட்ஸ் சேர்த்தும் சாப்பிடுகிறார்கள். இதனை சென்னையில் சாப்பிடலாமென்றால் கோடம்பாக்கத்தில் இருக்கிற சம்ஷ்கிருதி ஹோம் ஃபுட் கடையில் கிடைக்கும். ஆந்திராவில் கிடைக்கும் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ் இனிப்புகளை மட்டுமே தயாரித்து விற்பதால் அசல் சுவையில் இதனை சாப்பிடலாம்.

The post Food spot appeared first on Dinakaran.

Tags : Aval Milk ,Awal ,
× RELATED ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பால் பனியன் தொழில் பாதிப்பு: கமல் குற்றச்சாட்டு